வரலாறும் வள்ளுவமும்
3. துணிவிருந்தால் துயரில்லை
1972ஆம் ஆண்டு- ஜெர்மனி நாட்டின் மியூனிக் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. எந்த ஜெர்மனி தேசத்தில் கொடுங்கோலன் ஹிட்லரால் கொத்துக்கொத்தாக யூதர்கள் கொல்லப்பட்டனரோ, அதே ஜெர்மனி தேசத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள யூதர்கள் சென்றனர்- இஸ்ரேல் நாட்டின் விளையாட்டு வீரர்களாக. துரதிருஷ்டவசமாக இம்முறையும் அந்த யூதர்கள் அங்கே கொல்லப்பட்டனர்; "கறுப்பு செப்டம்பர்" என்னும் பாலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அவர்களைக் கொன்றனர்.
மியூனிக் படுகொலையில் தொடர்புடைய "கறுப்பு செப்டம்பர்" இயக்கப் போராளி
(நன்றி: The Hindu)
பாலஸ்தீன் விவகாரத்தில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் புரிந்த துரோகத்திற்காகவும், பாலஸ்தீன் குறித்த செய்திகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் "கறுப்பு செப்டம்பர்" இயக்கப் போராளிகள் இவ்வாறு கொடுஞ்செயல் புரிந்தனர்.
ஆனால், இத்தகைய அதிரடிகளால் இஸ்ரேலை நடுங்கிட வைக்க முடியவில்லை. மியூனிக் படுகொலைகளின் மூளைகளாக விளங்கிய ஒவ்வொரு நபரையும் உலகின் பல்வேறு நாடுகளில் தேடிச்சென்று கண்டுபிடித்து, அவர்களை ஒவ்வொருவராக வேட்டையாடியது இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொஸாட்.
இது மட்டுமல்ல; இஸ்ரேல் உருவான 1948ஆம் ஆண்டுமுதல் அந்நாடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தன்னைச் சுற்றியுள்ள இஸ்லாமிய தேசங்களோடு தொடர்ந்து போரில் ஈடுபட்டே வந்திருக்கிறது; இன்றுவரை இஸ்ரேல் தோற்றதேயில்லை. இத்தகைய தொடர்ச்சியான போர்களால் அந்நாட்டின் வளர்ச்சியும் சீர்குலைந்து விடவில்லை.
பாலஸ்தீன் விவகாரத்தில், பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் புரிந்தது பச்சைத்துரோகமே; இவ்விஷயத்தில் மகாத்மா காந்தியின் நிலைப்பாடும் இதுவே.
இருப்பினும் இஸ்ரேலியக் குடிமகனின் பார்வையிலிருந்து ஒரு சுதந்திர தேசமாக இஸ்ரேலின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அத்தேசம் தான் எதிர்கொள்ளும் எத்தகைய தாக்குதலையும் திறம்பட சமாளித்து, அதில் வெற்றிபெறும் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது.
துன்பம் வந்த வேளையில் துயருற்று வாடிக் கிடக்காமல், அத்துயரை நீக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றில் முனைப்போடு ஈடுபடும் குணம்தான் இஸ்ரேலின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணம் என்றே தோன்றுகிறது.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (குறள் எண்- 623)
உதவிய நூல்கள்/திரைப்படம்:
1) "மொஸாட்"- என்.சொக்கன்- கிழக்கு பதிப்பகம்
2) "நிலமெல்லாம் ரத்தம்"- பா.ராகவன்- கிழக்கு பதிப்பகம்
3) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய "Munich" என்னும் ஆங்கிலத் திரைப்படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக