வரலாறும் வள்ளுவமும்
வார்த்தைகளால் மாறிய வரலாறு
குடியரசாக விளங்கிய ரோம் நாட்டின் சர்வாதிகாரியாக ஆக விரும்பிய ஜூலியஸ் சீசர், ஐட்ஸ் ஆஃப் மார்ச் (மார்ச் 15) அன்று செனட் சபையிலே படுகொலை செய்யப்பட்டார்.
(நன்றி: விக்கீபீடியா)
சீசரின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் ரோம் குடியரசு முறைக்கு வரவிருந்த சர்வாதிகார ஆபத்தை நீக்கிவிட்டதால், பொதுமக்கள் தங்களின் கொலைச்செயலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று கணக்குப் போட்டனர், சீசரைப் படுகொலை செய்த குழுவின் முக்கியத் தலைவர்களான புரூட்டஸூம் கேசியஸூம்.
பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சீசர் சடலத்தின் முன்பு நின்றவாறு அவரின் தோழரான மார்க் ஆண்டனி ஆற்றிய உரை, வரலாற்றின் போக்கையே மாற்றியது.
(நன்றி: விக்கீபீடியா)
ஷேக்ஸ்பியர் எழுதிய "ஜூலியஸ் சீசர்" நாடகத்தில் "Friends, Romans, Countrymen, lend me your ears!" எனத் துவங்கும்- மார்க் ஆண்டனியின் முக்கியத்துவம் வாய்ந்த அவ்வுரை.
ஆண்டனியின் பேச்சைக் கேட்ட பொதுமக்களுக்கு சீசரின் மீதான மதிப்பு உயர்ந்தது; அவரைக் கொன்ற செனட்டர்கள் குழுவின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் இந்த உணர்ச்சிவசப்பட்ட மனநிலையை புருட்டஸ், கேசியஸ் போன்றோர் எதிர்பார்க்கவில்லை. இறுதியில் சீசரைக் கொன்ற சதிகாரர்கள் விரட்டப்பட்டு, அழிக்கப்பட்டனர். சீசரின் உறவினரான ஆக்டேவியஸ் சீசர் ரோமப் பேரரசின் அரசனாகப் பொறுப்பேற்றார்.
குடியரசு முறையைக் கைவிட்டு, மீண்டும் மன்னராட்சியைத் தேர்ந்தெடுத்தது ரோம். மார்க் ஆண்டனியின் சொற்பொழிவு இதில் முக்கியப் பங்காற்றியது.
சொல்ல வேண்டிய செய்திகளை வரிசைப்படக் கோர்த்து, சுவையாகச் சொல்லும் ஆற்றல் உடையவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள் எண்- 648)
உதவிய நூல்கள்/வலைதளம்:
1) ஜூலியஸ் சீசர்- ஜனனி ரமேஷ்- கிழக்குப் பதிப்பகம்
2) வெல்லும் சொல்- வைகோ- விகடன் பதிப்பகம்
3) விக்கீபீடியா
கருத்துகள்
கருத்துரையிடுக