வரலாறும் வள்ளுவமும்

2. வெ(கொ)ல்லும் சொல்

சொல்லால் ஆக்கம்:

இரண்டாம் உலகப் போர்  தொடங்கிய நேரம் (செப்டம்பர் 1939); போலந்தின் மீது ஜெர்மனி போர் தொடுக்க, போலந்திற்கு  ஆதரவாக ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தது இங்கிலாந்து. போரின் ஆரம்ப கட்டத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பெற்ற தொடர் வெற்றிகளால், இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மீது அதிருப்தி எழுந்தது.  அந்த இக்கட்டான சூழலில் இங்கிலாந்தின் பிரதமர் நெவில் சேம்பர்லேன்,  பதவியிலிருந்து விலகினார் (மே 1940). நாட்டை வழிநடத்தும் பெரும்பொறுப்பு சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தோள்களில் இறங்கியது.


                                   

நெவில் சேம்பர்லேன்                                                     சர் வின்ஸ்டன் சர்ச்சில்

(நன்றி: விக்கீபீடியா)

அன்றைய சூழலில் ஜெர்மனியே வெற்றிபெறும் என்ற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கியிருக்க, இங்கிலாந்தின் தன்னம்பிக்கையும், எழுச்சியுணர்வும்  மிகவும் குலைந்து போயிருந்தது.  தன்னுடைய சொற்பொழிவுகளால், நாட்டின் அவநம்பிக்கையைப் படிப்படியாக சர்ச்சில் குறைக்கத் துவங்கினார்; "உன்னுடைய குறிக்கோள் என்னவென்று என்னிடம் கேட்டால், நான் ஒரே வார்த்தையில் பதில் சொல்வேன்- "வெற்றி" என்ற ஒரே வார்த்தைதான் அது; என்ன விலை கொடுத்தாலும் வெற்றியைப் பெறுவோம். இந்தக் களத்தில் வெற்றி பெறாவிட்டால் நமக்கு வாழ்வில்லை!" என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முழங்கினார்; தன்னுடைய கைவிரல்களை "V" வடிவில் வைத்து "V for Victory"  என்று நேர்மறை எண்ணத்தைப் பரப்பினார். 

அவருடைய தலைசிறந்த சொல்லாற்றாலும், இராஜதந்திர நடவடிக்கைகளாலும் நம்பிக்கை அடைந்த இங்கிலாந்தும், நேச நாடுகளும் படிப்படியாக வெற்றிகள் பெற்று, இறுதியில் ஹிட்லரைத் தோற்கடித்தன. இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனைகளில் ஒன்று- சர்ச்சிலின் பேச்சாற்றல் என்றால், அது மிகையல்ல. 


சொல்லால் அழிவு:

பிரான்ஸில் பதினாறாம் லூயி ஆட்சிக் காலத்தில் புரட்சி ஏற்பட்டது (1789). பொதுமக்கள் பொங்கியெழுந்து பாஸ்டைல் கோட்டைச் சிறையைத் தகர்த்தெறிந்தனர்; மன்னனின் தலை கில்லட்டின் எந்திரத்தால் வெட்டப்பட்டது. 



பாஸ்டைல் கோட்டைச் சிறை தகர்க்கப்படுதல்

(நன்றி: விக்கீபீடியா)

பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமான ஒன்று- பொதுமக்களின் இன்னல்களை அரச குடும்பத்தினர் இனங்கண்டு அவற்றைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சொகுசான அரச போகத்தில் திளைத்ததே. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட அமெரிக்க நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக, பதினாறாம் லூயி தன்னுடைய படைகளை ஈடுபடுத்த, போராட்டத்தில் அமெரிக்கா ஜெயித்தது; ஆனால், போர்ச்செலவுகளால் பிரான்ஸின் நிதி நிலைமை சீர்குலைந்தது. அதனை ஈடுகட்ட,  பொதுமக்களின் மீது மேலும் வரிகள் திணிக்கப்பட்டன. 


நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ரொட்டித்துண்டு கூட கிடைக்காமல் பசியில் அல்லாடினார்கள். இது குறித்த செய்தியைக்  கேள்விப்பட்ட அரசி மேரி அன்டோனியட் கூறினாளாம்: "சாப்பிட ரொட்டித்துண்டு இல்லையானால் என்ன? அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்!" 

"ரொட்டித்துண்டை விட கேக்கின் விலை அதிகம்; ரொட்டித்துண்டையே வாங்க இயலாத நிலையில் உள்ள மக்களால் எப்படி கேக் வாங்க முடியும்?" என்பன போன்ற அடிப்படை சிந்தனைகளும் இல்லாமல் அரசி சொன்ன சொற்கள், எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றவே, பொதுமக்கள் கோபம் கொப்பளிக்க வீதியில் திரண்டனர். பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட, அரசி மேரி அன்டோனியட் கூறிய இச்சொற்களும் காரணம் என்றால் அது மிகையல்ல.


ஆக, சொற்களால் ஆக்கமும் வரும்; கேடும் வரும். எனவே, நாம் கூற விழையும் சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.


ஆக்கமும் கேடும் அதனால் வருதலாற்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் எண்- 642)


உதவிய நூல்கள்/வலைதளம்:

1) "வெல்லும் சொல்"- வைகோ- விகடன் பதிப்பகம்

2) "வாவ் 2000"- வேல்ஸ்- விகடன் பதிப்பகம்

3) விக்கீபீடியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாறும் வள்ளுவமும்

வரலாறும் வள்ளுவமும்