வரலாறும் வள்ளுவமும்
1. ஜார் வம்சத்தின் வீழ்ச்சி
கம்யூனிசப் புரட்சிக்கு முன்பிருந்த இரஷ்ய நாட்டை சுமார் முன்னூறு வருடங்களாக ஆண்டு கொண்டிருந்தனர் ஜார் வம்சத்தினர். "யுகப் புரட்சி" என்று மகாகவி பாரதியார் வருணித்த கம்யூனிசப் புரட்சியால், ஜார் வம்சத்தின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது; ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னனும் அவன் குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னன் (நன்றி: விக்கிபீடியா)
இரஷ்ய வரலாற்றுப் புத்தகத்தின் இரத்தக்கறை படிந்த இப்பக்கங்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டென்றாலும், அவற்றில் மிக முக்கியமானவை இரண்டு காரணங்கள்:
அ) இரஸ்புட்டீன் :
இரஸ்புட்டீன் என்னும் மதவாதியை மன்னனும் அவன் மனைவியும் அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்டனர்.
இரஸ்புட்டீன் (நன்றி: விக்கிபீடியா)
"தனக்குப் பிறகு இரஷ்ய நாட்டை ஆளப் பிறந்த தனது ஒரே மகனுக்கு ஏற்பட்ட இரத்தம் உறையா நோயை (Haemophilia), தனது மந்திர சக்தியால் சரிசெய்யக் கூடியவர்" என்ற நம்பிக்கை இரஸ்புட்டீனின் மீது மன்னருக்கு ஏற்பட்டதன் காரணமாக, மதவாதி இரஸ்புட்டீனுக்கு அரண்மனை வாழ்வு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு அந்த மதவாதி ஆடிய ஆட்டங்களைக் கண்டு பொதுமக்கள் முகம் சுளித்தனர். நாளடைவில் மதவாதியின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட கோபம், மதவாதியோடு நின்றுவிடாமல் மன்னர் குடும்பத்தின் மீதும் பாய்ந்தது. சுருங்கச் சொன்னால், இரஸ்புட்டீன் விஷயத்தில் மன்னர் குடும்பம் செய்யக்கூடாததைச் செய்தது; அதனால் அதன் பலனை அனுபவித்தது.
ஆ) அலட்சியம்:
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த அடிப்படை புரிதல் கூட அரச குடும்பத்தினருக்கு இல்லாமல் போனது. எப்போதும் அரச போகம், அரண்மனை வாழ்வு என்றே காலம் கழித்த அரச குடும்பத்தினர், பொதுமக்களின் துயர்களைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் இருந்தனர். இது குறித்து அரசனின் கவனத்தை ஈர்க்க பாதிரியாரின் தலைமையில் அமைதிப் பேரணி வந்த பொதுமக்களை எல்லாம் இராணுவத்தை ஏவி சுட்டுத் தள்ளினர். இத்தகைய செயல்பாடுகளால் பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகி, புரட்சிக்கு அடிகோலினர். சுருங்கச் சொல்லின், பொதுமக்களின் சிக்கல்களைத் தீர்த்திட செய்யப்பட வேண்டிய செயல்களைச் செய்யாதிருந்தனர்.
ஆக, செய்யக் கூடாததைச் செய்ததாலும், செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விட்டதாலும் ஜார் வம்சம் வீழ்ந்தது.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் எண்- 466)
உதவிய நூல்/வலைதளம்:
1) வாவ் 2000- வேல்ஸ்- விகடன் பதிப்பகம்
2) Netflix தொடர் "The last czars"
3) விக்கிபீடியா


கருத்துகள்
கருத்துரையிடுக